

டெல்லியில் விமான எரிபொருள் மீதான வாட் வரியை 5 சதவீதம் உயர்த்த அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் டெல்லியில் இருந்து செல்லும் விமானங்களின் பயணக்கட்டணம் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது விமான எரிபொருள் மீது 20 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. டெல்லி அரசிடம் தற்போது நிதிப் பற்றாக் குறை ஏற்படும் நிலை உள்ளதால் இந்த வரியை 25 சதவீதமாக உயர்த் தலாம் என அரசுக்கு அம்மாநிலத் தின் வாட் வரி மற்றும் வணிகத் துறை பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்கும் வகையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்து வரு வதாகக் கூறப்படுகிறது. இந்த 5 சதவீத வரி உயர்வை பயணிகளிடம் இருந்து வசூலிக்க விமான நிறு வனங்கள் முயற்சிக்கும். எனவே டெல்லியில் இருந்து செல்லும் உள்ளூர் விமானங்களின் பயணக் கட்டணம் உயரும் அபாயம் நிலவுகிறது.
நாட்டின் தலைநகரமாக டெல்லி இருப்பதால் இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு கிளம்பிச் செல்லும் விமானங்கள் அதிகம். இத்துடன் மாற்று வழிக்காகவும் அன்றாடம் நூற்றுக்கணக்கான விமானங்கள் டெல்லியில் இறங்கிச் செல்கின்றன. அப்போது எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன. இதனால் டெல்லியில் இருந்து கிளம்பும் உள்ளூர் ஜெட் பயண விமானங்கள் மாதம் ஒன்றுக்கு சுமார் 75 லட்சம் கிலோ லிட்டர் விமான எரிபொருள் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வாட் வரி, டெல்லி அரசுக்கு முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் விமான எரிபொருளுக்கான வாட் வரியை 5 சதவீதம் உயர்த்துவதால் டெல்லி அரசுக்கு மாதம் ரூ. 8 முதல் 12 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
டெல்லியில் வாட் வரி அறிமுகம் செய்யப்பட்டபோது 12.5 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் விமான எரிபொருள், புகையிலை, மது உட்பட 30 பொருட்கள் மீது 30 சதவீதம் வரை வாட் வசூலிக்கலாம் என சட்டத் திருத்தம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி அரசுக்கு வாட் வரி மூலமாக ரூ. 18,500 கோடி கிடைத்தது. இந்த ஆண்டு இது ரூ. 24,000 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தொகை கடந்த அக்டோபர் வரை ரூ.11,000 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. இதை சரிகட்டும் பொருட்டு விமான எரிபொருள் உட்பட பல்வேறு பொருட்கள் மீதான வாட் வரியை டெல்லி அரசு உயர்த்தி வருகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பதவியேற்றது முதல், பல்வேறு நிதி மற்றும் வியாபார நிறுவனங்கள் டெல்லி அரசுக்கு வாட் வரியை கட்டாமல் ஏமாற்றி வருவதாக புகார் இருந்து வருகிறது.
இதனால், பல நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோல் பாக் பகுதியில் வெளிநாட்டு எல்இடி டி.வி.க்கள் வியாபாரம் செய்து வரும் ஒரு நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாட் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்துறையினர், கடந்த மாதம் நடத்திய திடீர் சோதனைகளில் வாட் வரி ஏய்ப்பு செய்ததாக 150 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.