

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணியின் கைப்பாவையாக மாநில ஊடகங்கள் மாறி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, அங்குள்ள ஊடகங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், இடதுசாரிக் கூட்டணிதான் இந்த முறைவெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது:
கேரளாவை பொறுத்தவரை ஊடகங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணியின் கைப்பாவையாக மாறிவிட்டன. மக்களை திசைதிருப்புவதற் காக பொய்யான கருத்துக்கணிப்புகளை அவை வெளியிட்டு வருகின்றன.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றுக்கென சில தொழில் தர்மங்களும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கேரள ஊடகங்கள் மாநிலஅரசு வழங்கும் விளம்பரப் பணத்துக்காக அவற்றை குழிதோண்டி புதைத்துவிட்டன.
எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு அவை இடம் அளிப்பதில்லை. ஆளுங்கட்சிக்கு தருகின்ற ஆதரவில் ஒரு சதவீதத்தைக் கூட எதிர்க்கட்சிக்கு ஊடகங்கள் வழங்க வேண்டாமா? சபரிமலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கேரள அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அது, இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.
இவ்வாறு ரமேஷ் சென்னிதாலா கூறினார்.