

கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு வைரஸ் பரவலை தீவிர பிரச்சினையாக கருதவில்லை. அரசின் மெத்தன போக்கால் வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் உயருகிறது.
வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரம் அடைந்திருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. தற்போது மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 12 மாதங்களுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால்தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். இதேநிலை நீடித்தால் 10 ஆண்டுகளானாலும் வைரஸ் பரவலை தடுக்கவே முடியாது.
வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பிவைப்பது நல்லமுயற்சிதான். அதேநேரம் நமதுநாட்டையும் கவனிக்க வேண்டியது அவசியம். நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி சென்று சேரவில்லை. இது மிக தீவிரமான பிரச்சினை. இப்போதே கவனம் செலுத்தினால்தான் வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க முடியும்.
இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில் இப்போதுவரை 4 கோடி மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அனைத்துதரப்பு மக்களுக்கும் தடுப்பூசிதிட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான தெளிவான, உறுதியான கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும்.
உலகளாவிய கரோனா தொற்று புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவில் 28 சதவீதமும், பிரேசிலில் 9.7 சதவீதமும், இந்தியாவில் 2.4 சதவீதம் பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவின் பங்கு 9.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
சர்வதேச கரோனா உயிரிழப்பில் அமெரிக்காவில் 23 சதவீத உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. பிரேசிலில் 7.7 சதவீதமும் இந்தியாவில் 0.9 சதவீத உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச கரோனா உயிரிழப்பில் இந்தியாவின் பங்கு 1.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறியதற்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசி திட்டம் தொடர்பான விரிவான பதிலைமத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.