நக்மாவை காண திரளும் இளைஞர் கூட்டம்: சீண்டியவருக்கு கன்னத்தில் ‘பளார்

நக்மாவை காண திரளும் இளைஞர் கூட்டம்: சீண்டியவருக்கு கன்னத்தில் ‘பளார்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் வேட்பாளரான நடிகை நக்மாவை காண இளைஞர்கள் கூட்டம் திரள்கிறது. இந்தக் கூட்டத்தில் தன்னை சீண்டிய இளைஞரை ‘பளார்’ என அறைந்தார் நக்மா.

மீரட்டின் ஜனிகோட்டி பகுதியில் கடந்த வியாழக் கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற் பதற்காக மேடையை நோக்கி சென்றார் நக்மா. அப்போது மிக அருகில் காண வேண்டி நக்மாவை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டனர். அந்த நேரத்தில் ஒரு இளைஞர் நக்மாவை தொட்டு சீண்டியுள்ளார்.

இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான நக்மா, அந்த இளைஞரின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். தொடர்ந்து நக்மாவின் கோபம் மேடையில் பேசிய போதும் வெளியானது.

அவர் பேசுகையில், "நான் மும்பையிலிருந்து உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். என்னைப் போன்ற வெளி ஆட்களுக்கு தொல்லை கொடுத்தால் மீரட்டிற்கு யாரும் வர மாட்டார்கள். இதைக் கூற எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்றார்.

ஆனால் அந்த இளைஞரைப் பிடித்து போலீசில் ஒப்படைக்க ஏனோ யாரும் முன்வரவில்லை. எனினும், இந்த சம்பவத்துக்காக ஆளும் சமாஜ்வாதி அரசு மீது குறை கூற காங்கிரஸார் தவற வில்லை.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீரட் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்தர் சர்மா ‘தி இந்து'விடம் கூறுகை யில், "தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி ஆளும் சமாஜ்வாதி அரசு நக்மாவுக்கு முறையான பாதுகாப்பு தரத் தவறி விட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இப் படி செய்கின்றனர். இது குறித்து ஆணையத்திடம் புகார் செய்வோம்" என்றார். நான்கு முனை போட்டி நிலவும் மீரட்டில் தற்போது எம்பியாக இருக்கும் ராஜேந்தர் அகர்வால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி சார்பில் உபி அமைச்சர் ஷாயித் மன்சூர் மற்றும் பகுஜன் சமாஜ் சார்பில் முன்னாள் மீரட் எம்பி ஷாஹித் அக்லாக் ஆகியோரும் வேட்பாளர்களாக உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in