மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 85 சதவீத தொற்று; கரோனா விதிகளை கடைபிடிக்காவிட்டால் இந்தியாவில் 2-வது அலையை தடுக்க முடியாது: எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, வைரஸ் பரவலை தடுக்க மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.படம்: பிடிஐ
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, வைரஸ் பரவலை தடுக்க மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.படம்: பிடிஐ
Updated on
2 min read

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதி களை கடைபிடிக்காவிட்டால் இந்தியா வில் 2-வது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கரோனா பரவல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 43,846 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத தினசரி பாதிப்பு ஆகும். இதையடுத்து பஞ்சாப், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் பள்ளிகளை மூடுதல் பொதுமக்கள் கூடுவதை கட்டுப்படுத்துதல் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவ மனை தலைவர் ரந்தீப் குலேரியா தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனா பரவல் தடுப்பு விதிமுறை களை பொதுமக்கள் பின்பற்றுவ தில்லை. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் கரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் முகக்கவசம் அணிவதில்லை. அதிகம் பேர் பங்கேற்கும் கூட்டங் களில் கூட மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற பல்வேறு கூட்டங்கள் கரோனா பரவலுக்கு காரணமாக அமைந்தன.

அடுத்தபடியாக கரோனா பரிசோதனை, பாதிப்பு உறுதி செய் யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், பாதிக்கப்பட்ட வர்களை தனிமைப்படுத்துதல் உள் ளிட்ட அடிப்படைக் கொள்கையில் பின்தங்கி உள்ளோம். இதுபோல கரோனா வைரஸ் தன்னைத்தானே உருமாற்றிக் கொள்கிறது. இதுபோன்று உருமாறிய சில வைரஸ் அதிக அளவில் பரவும் தன்மை கொண்டவை ஆகும். எனவே, கரோனா தடுப்பு விதி முறைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை என்றால் 2-வது அலையைத் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6 மாநிலங்களில் 83 சதவீதம்

மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத் திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 83 சதவீத கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவ ரத்தில், நாடு முழுவதும் ஒரேநாளில் 43,846 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் அதிகபட்ச தினசரி தொற்று ஆகும்.

மகாராஷ்டிராவில் 27,126 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் பதிவான அதிகபட்ச தினசரி தொற் றாகும். பஞ்சாபில் 2,578 பேர், கேரளா வில் 2,078 பேர், கர்நாடகாவில் 1,798 பேர், குஜராத்தில் 1,565 பேர், மத்திய பிரதேசத்தில் 1,308 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 6 மாநிலங்களில் மட்டும் 83 சதவீத கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3.09 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 197 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1.59 லட்சமாக அதிகரித் திருக்கிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு நகரங்கள், மாவட்டங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் தலை நகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆஜ்மீர், பில்வாரா, கோட்டா, உதய்பூர் உள் ளிட்ட 8 நகரங்களில் திங்கள்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் செய் யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருவோர், கரோனா தொற்று இல்லை என்று மருத்துவ சான்றிதழ் அளித்தால் மட்டுமே ராஜஸ்தானில் அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ சான்றிதழ் இல்லாதவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

திருமணம், இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. தொடக்க பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். இதர வகுப்புகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும். வகுப் பறையில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளை ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in