கும்பமேளாவை முன்னிட்டு கரோனா தடுப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த உத்தராகண்ட் அரசுக்கு அறிவுறுத்தல்

கும்பமேளாவை முன்னிட்டு கரோனா தடுப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த உத்தராகண்ட் அரசுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

கும்பமேளாவை முன்னிட்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தராகண்ட் அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதிவரை கும்பமேளா விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஹரிதுவார் செல்கின்றனர்.

இவ்வாறு அதிக அளவிலான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், கரோனா பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக உத்தராகண்டில் ஆய்வு மேற்கொண்ட மத்தியஅரசின் உயர்மட்டக் குழு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. மேலும், ஹரிதுவாரில் நாள்தோறும் வருகை தரும் பக்தர்களில் சுமார் 20 பேர் மற்றும் பக்தர்கள் அல்லாத பொதுமக்கள் சுமார் 20 பேர் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் உயர்மட்டக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ்பூஷண் உத்தராகண்ட் தலைமைச் செயலாளருக்கு நேற்று கடிதம்எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரிதுவாரில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கான மக்கள் அங்கு வருகை தருகின்றனர். இதுவரை சுமார் 32 லட்சம் பக்தர்கள் ஹரிதுவாரில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், கும்பமேளா நிகழ்ச்சியின் மூலமாக அது மேலும் அதிகரித்து விடாமல் தடுக்க வேண்டியது உத்தராகண்ட் அரசின் கடமையாகும்.

எனவே இதனைக் கருத்தில்கொண்டு, ஹரிதுவார் மட்டுமின்றி உத்தராகண்ட் முழுவதும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை பலமடங்கு அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, அவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் ஏராளமான கரோனா சிகிச்சை மையங்களை போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றகரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். அதுதவிர, ஹரிதுவாருக்கு வரும் வெளி மாநில பக்தர்களுக்கு எல்லையிலேயே வைரஸ்சோதனை செய்வதற்கு ஏற்ப மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in