

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏபிபிஎஸ்) கூட்டம் பெங்களூருவில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் கடந்த 12 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக இருந்த சுரேஷ் பையாஜி ஜோஷிக்கு (73) பதிலாக புதியபொதுச் செயலாளராக கர்நாடகாவை சேர்ந்த தத்தாத்ரேயா ஹொசபலே (66) தேர்வு செய்யப்பட்டார்.
1987-ம் ஆண்டு கர்நாடகாவை சேர்ந்த ஹெச்.வி.சேஷாத்ரி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக 9 ஆண்டுகள் இருந்தார். அவருக்கு பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த தத்தாத்ரேயா ஹொசபலே பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கர்நாடகா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், பாஜக தலைவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக எம்பி.யும், எழுத்தாளருமான ராகேஷ் சின்ஹா கூறியதாவது:
தத்தாத்ரேயா ஹொசபலே மிகவும் கூர்மையான அறிவாற்றலையும், விவேகத்துடன் செயல்படும் திறனையும் பெற்றவர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு வரும் 2024-ல் நூற்றாண்டை எட்ட இருக்கிறது. அந்த சமயத்தில் முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பையும்,பாஜக.வையும், இதர அமைப்புகளையும் பலம் வாய்ந்த அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்பதில் தத்தாத்ரேயா உறுதியாக இருக்கி றார். 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு 10 கிராமங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறார்.
மேலும் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பாஜக.வுக்கும்இடையே இன்னும் நெருக்கமான சூழலை உருவாக்க வேண்டும். அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இரு அமைப்புகளும் இணைந்து கூட்டு செயல் திட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என எண்ணத்தை கொண்டுள்ளார்.
தத்தாத்ரேயா கன்னடம், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் நாடு முழுவதும் அவரால் ஆளுமை செலுத்தமுடியும். குறிப்பாக, தென்னிந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சமூகத்தில் அனைத்து தளங்களிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். சிறுபான்மையினரையும், அனைத்து விளிம்புநிலை மக்களையும், நவீன சிந்தனை போக்குகளை கொண்டவர்களையும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் இணைக்க புதிய வியூகங்களை கொண்டிருக்கிறார். எனவே இவருடைய வருகை ஆர்எஸ்எஸ் அத்தியாத்தில் புதிய அலையை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.