பெண்களின் வாக்குகளைக் கவர காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இடையே கடும்போட்டி: தமிழக தேர்தல் கலாச்சாரத்தை நோக்கி திரும்பும் கேரளம்

பெண்களின் வாக்குகளைக் கவர காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இடையே கடும்போட்டி: தமிழக தேர்தல் கலாச்சாரத்தை நோக்கி திரும்பும் கேரளம்
Updated on
2 min read

கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணிஆட்சி அமையும் வாய்ப்பு இருப்பதாககருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் அதை எதிர்கொள்ளும்வகையில் தனிக்கவனம் செலுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. அதேநேரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தேர்தல்அறிக்கைகள் பெண்களின் வாக்குகளை வசீகரிக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் ஆண்களைவிட, பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது கேரளம் ஆகும். அதனால்தான் உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்தில் 50 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுவிட்டது. கேரளத்தில் மொத்தம் 140 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இப்போதும்கூட இங்குள்ள மொத்த வாக்காளர்களில் ஆண்களைவிட 8.27 லட்சம் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். இதனாலேயே பெண்களின் வாக்குகளை பெற்றுவிட்டால் ஆட்சிக்கு வந்துவிடலாம் எனகேரளத்தில் கட்சிகள் கணக்குப் போடுகின்றன. அதற்கு ஏற்ப அவர்களின் தேர்தல் அறிக்கையும் அமைந்துள்ளது.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு

கேரளத்தில் தொழிலாளர்களின் வாக்குகளை அதிக அளவில் மார்க்சிஸ்ட் கட்சி வைத்திருக்க, தேர்தல் அறிக்கையில் முதலாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். வணிகர்களைப் பாதுகாக்க முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் அமைக்கப்படுவதாகக் கூறியிருக்கும் காங்கிரஸ் கட்சி, தொடர்வேலைநிறுத்தம், கட்டாயமாக கடையடைப்பு போன்றவற்றில் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதேபோல் வீடற்ற5 லட்சம் ஏழைகளுக்கு வீடு வழங்க இருப்பதாகவும் சொல்கிறது. சபரிமலைஐயப்பன் கோயிலின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதுபோல் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தனித்துறை அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கேரளத்தில் நாளுக்கு, நாள் அதிகரித்துவரும் அரசியல் மோதல்களுக்கு இதன்மூலம் தீர்வுகாணப்படும்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், அரசுப்போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் சிறுகுழந்தைகளின் தாய்மார்களுக்கு அவர்கள் எந்தஇட ஒதுக்கீட்டுப் பிரிவி்ல் வந்தாலும் இரண்டு ஆண்டுகள் வயதுத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதில் இருந்து 37 ஆக இதை உயர்த்தியிருப்பதன் மூலம் திருமணம் முடிந்த பெண்கள், கைக்குழந்தையைப் பராமரிப்பவர்களும் பயன் பெறுவார்கள் என்கிறது காங்கிரஸ் கட்சி.

நியாய் திட்டத்தின் கீழ் வரும் பெண்களுக்கு மாதம்தோறும் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இந்நிலையில் இப்போது தேர்தல் அறிக்கையில் நியாய் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாத பெண்களின் வாக்குகளையும் கவரும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி, நியாய் திட்டத்தின் கீழ் வராத 40 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும். அனைத்து வெள்ளை ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 5 கிலோ இலவச அரிசி வழங்குவோம் எனவும் அறிவித்துள்ளது. இதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள், கேரள அரசு போக்குவரத்துக்கழகம், மீனவர்களின் படகு ஆகியவற்றுக்கான பெட்ரோல், டீசல்விலையில் மாநில அரசின் எரிபொருள் வரியைக் குறைப்பது, சுகாதாரத்துறைக்கு காருண்யா திட்டத்தை அமல்படுத்துவது ஆகியவை குறித்தும் பேசியிருக்கும் இந்த தேர்தல் அறிக்கையை ‘மக்களுக்கான அறிக்கை’ என சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி சசிதரூர். மீனவர்களின் எரிபொருள்களுக்கு வரி குறைப்புப்போக மானியமும் வழங்கப்படும் என்கிறது காங்கிரஸின் அறிக்கை.

கரோனா காலகட்டத்தில் இருந்தே குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறது கேரள அரசு. அதன் இடையே நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. தற்போதும் விலையில்லா மளிகைப் பொருள் வினியோகம் தொடர்ந்து வரும் நிலையில், மீண்டும் மார்க்சிஸ்ட் ஆட்சி அமைந்தால் இதைத் தொடர்வோம் என்கிறது அதன் தேர்தல் அறிக்கை. ஏற்கெனவே 600 ரூபாய் வழங்கப்பட்டு வந்த முதியோர், கைம்பெண் பென்ஷன் திட்டத்தை 1,600 ரூபாயாக உயர்த்தியிருந்தது கேரள இடதுசாரி அரசு. தேர்தல் அறிக்கையில் அதை 2500 ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்துள்ளனர்.

ஒரு வருடத்தில் ஒன்றரை லட்சம் ஏழை களுக்கு வீடு, அடுத்த ஐந்தாண்டுகளில் 40 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியும், இல்லத்தரசிகளுக்கு பென்ஷன் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியிட்டது குறித்து செய்தி வெளியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான தேசாபிமானியும்கூட, ‘வீட்டம்மமார்க்கும் பென்ஷன்’ என்றே தலைப்பிட்டு எழுதியது. மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சபரிமலை விவகாரம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை அறிவித்தனர். அதேபோல் கேரளத் தேர்தல்களத்திலும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் இல்லத்தரசிகளுக்கு பென்ஷன் திட்டத்தை பிரதானமாக அறிவித்துக் களம் காண்கின்றன. ரேசன்கடைகளின் மூலம் இலவசமாக வந்துசேரும் மளிகைப்பொருள்கள், பெண்களுக்கான பணபலன்கள் தொடர்பான வாக்குறுதியை மையப்படுத்தி கேரள வாக்காளர்கள் சந்திக்கும் முதல்தேர்தல் இதுதான்.

தமிழகத்தின் தேர்தல் கலாச்சாரம் மெல்ல, மெல்ல கேரளத்திற்குள்ளும் ஊடுருவி வருவதையே இது படம்பிடித்துக் காட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in