

ராபர்ட் வதேராவுக்கு எதிரான நில பரிவர்த்தனை வழக்கு வலுவாக இருப்பதாகவும், இது தொடர்பான விசாரணையில் தலையீடு இருக்காது என்றும் ஹரியாணா மாநில அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், ஹரியாணா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகள், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது வழக்கு தொடுத்துள்ளன என்று ராபர்ட் வதேரா குற்றம் சாட்டி இருந்த நிலையில் ஹரியாணா அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில மூத்த அமைச்சர் அனில் விஜ் அம்பாலாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராபர்ட் வதேரா இதுவரை சம்பாதித்துள்ள சொத்துகள் அனைத்தும் அரசியல் வழி வந்தவையே.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. வதேரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் உள்ளது. இது தொடர்பான விசாரணையில் அரசு எந்த வகையிலும் குறுக்கிடாது. அதேநேரம் வதேராவுக்கு எதிராக ஆணையம் அறிக்கை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா (46). ராஜஸ்தான், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அரசு நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக வதேரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி எஸ்.என்.திங்ரா ஆணையம் விசாரித்து வருகிறது.