

சோட்டா ராஜனை அவரது சகோதரிகள் சந்திக்கக் கோரி வழங்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரி களுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிழல் உலக தாதா சோட்டா ராஜனை, சிபிஐ அதிகாரிகள் தற்போது 10 நாள் காவலில் விசாரித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் சோட்டா ராஜனை காவலில் வைத்துள்ளனர். அவரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் சோட்டா ராஜனின் சகோதரி சுனிதா சக்காராம் சவான், இவரது மூத்த சகோதரி மாலினி சக்பால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் சகோதரிகள் 2 பேரும் கூறியிருப்பதாவது:
நாங்கள் கடந்த 27 ஆண்டுகளாக எங்கள் சகோதரன் சோட்டா ராஜனை சந்திக்கவே இல்லை. தற்போது `பாய் தூஜ்’ பண்டிகையின் போது, (ரக்ஷா பந்தன் போலவே சகோதரர்களை வாழ்த்தும் பண்டிகை) எங்கள் சகோதரனை சந்தித்து ஆசிர்வாதம் செய்ய கருணை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். மேலும், சகோதரிகள் இருவரும் உடல்ரீதியாக நடக்க முடியாதவர்களாக உள்ளனர். எனவே அவர்களது மருமகன் அனில் மேனன் என்பவரை உடன் துணைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
சோட்டா ராஜன் மீதான விசாரணைக்கு எந்த குந்தகமும் வராமல் நடந்து கொள்வோம். அவரை சந்திக்க நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் குமார் இல்லத்தில் நேற்று நடந்தது. சகோதரிகள் சார்பில் வழக்கறிஞர் ராஜீவ் ஜெய் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, சகோதரிகள் இருவரும் சிபிஐ விசாரணை அதிகாரியை விண்ணப்பத்துடன் அணுகும்படி உத்தரவிட்டார். மேலும், சோட்டா ராஜனின் சகோதரிகள் அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்கும்படி சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.