மகாராஷ்டிராவில் ஒரு அமைச்சருக்கு ரூ. 100 கோடி வசூல் இலக்கா? -  ரவி சங்கர் பிரசாத் கேள்வி

மகாராஷ்டிராவில் ஒரு அமைச்சருக்கு ரூ. 100 கோடி வசூல் இலக்கா? -  ரவி சங்கர் பிரசாத் கேள்வி
Updated on
1 min read

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஒருவரே மாதத்துக்கு 100 கோடி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தால் மற்ற அமைச்சர்கள் என்ன இலக்கு நிர்ணயித்து இருப்பார்கள் என மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பைவீட்டின் முன்பு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெடிபொருட்களுடன் ஸ்கார்பியோ கார் நிறுத்தப் பட்டிருந்தது. அந்த காரில் மிரட்டல் கடிதமும் இருந்தது.

இதுகுறித்து மும்பை போலீ ஸார் விசாரணை நடத்தினர். அதில்,அந்த கார் தாணே பகுதியை சேர்ந்த வர்த்தகர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு கார் காணாமல் போய்விட்டதாக அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்தார். திடீர் திருப்பமாக கடந்த 5-ம் தேதி மான்சுக் ஹிரனின் உடல், தாணேவில் உள்ள ஒரு நீரோடையில் மீட்கப்பட்டது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தற்போது விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில் மான்சுக் ஹிரனின் நண்பரும், மும்பை போலீஸ் அதிகாரியுமான சச்சின் வாஸுக்கு வழக்கில் நெருங்கிய தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கு விவகாரத்தால் மும்பை போலீஸ் கமிஷனர் பரம் வீர் சிங் அண்மையில் இட மாற்றம் செய்யப்பட்டார். அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

"அமைச்சர் அனில் தேஷ் முக்குக்கும் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மாதந்தோறும் ரூ.100 கோடியை வசூல் செய்து கொடுக்க வேண்டும் என்று சச்சின் வாஸுக்கு அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களில் அமைச்சரை, சச்சின் வாஸ் பலமுறை சந்தித்துப் பேசியி ருக்கிறார்" என்று பரம்வீர் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்து பாஜக மகாராஷ்டிர அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஒருவரே மாதத்துக்கு 100 கோடி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தால் மற்ற அமைச்சர்கள் என்ன இலக்கு நிர்ணயித்து இருப்பார்கள். இதற்கு பிறகு மகாராஷ்டிர அரசு பதவியில் நீடிக்க தகுதி இழந்து விட்டது. ஒரு நாள் கூட அந்த அரசு பதவியில் நீடிக்க கூடாது. உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in