கிழிந்த ஜீன்ஸ் விவகாரத்தில் எல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பை இழுக்காதீர்கள்: தத்தாத்ரேய ஹொசபலே கருத்து

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே: படம் | ஏஎன்ஐ.
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே: படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

கிழிந்த ஜீன்ஸ் விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் தகுதியானவர். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடர்புபடுத்தாதீர்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்பட்டு, புதிய முதல்வராக திராத் சிங் ராவத் பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் திரிவேந்திர சிங் ராவத் பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் குறித்துப் பேசியது சமூக வலைதளத்தில் பெரும் கண்டனத்தையும், சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

டேராடூனில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் முதல்வர் திராத் சிங் ராவத் பேசுகையில், “விமானத்தில் செல்லும்போது ஒரு கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனப் பெண், தனது குழந்தைகளுடன் பயணம் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற பெண்கள் சமூகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்துக்கும், நம் குழந்தைகளுக்கும் என்ன மாதிரியான செய்தியைத் தருவார்கள்.

உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத்.
உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத்.

பணக்காரக் குழந்தைகளைப் போல தோற்றமளிக்க வெறும் முழங்கால்களைக் காண்பித்தல், கிழிந்த டெனிம் ஜீன்ஸ் அணிகிறார்கள். வீட்டிலிருந்து இந்தப் பழக்கம் வராவிட்டால் வேறு எங்கிருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

திராத் சிங் ராவத் கருத்து குறித்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் பெண் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். திராத் சிங் பார்வையில்தான் அனைத்தும் இருக்கிறது என காங்கிஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிரதமர் மோடி இணைந்திருந்த புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில் பிரதமர் மோடி அரைக்கால் சட்டை அணிந்திருந்தார். இதைக் குறிப்பிட்டு பிரியங்கா காந்தி, “கடவுளே, முழங்கால்கள் தெரிகின்றன” எனக் கிண்டல் செய்திருந்தார்.

இந்நிலையில் பெண்களின் ஆடை குறித்த தனது கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததை உணர்ந்த முதல்வர் திராத் சிங் ராவத் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தத்தாரேய ஹொசபலே நேற்று இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “கிழிந்த ஜீன்ஸ் பற்றி அந்தப் பெண் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவர்தான் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மக்கள் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். அது சரியா அல்லது தவறா என அவர்களிடம் கேட்க வேண்டும். ஆனால், அனைத்துக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடர்புபடுத்த எந்தக் காரணமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in