

மியான்மரில் இருந்து வரும் அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். மியான்மரில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்து இந்தியா கண்ணைமூடிக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடிக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் சோரம்தங்கா தலைமையிலான மிசோரம் தேசிய முன்னணி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
மியான்மரில் நடந்து வரும் ராணுவப் புரட்சியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரைச் சேர்ந்த போலீஸார், அரசியல் தலைவர்கள் ராணுவ ஆட்சிக்கு பயந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு தப்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் மியான்மரிலிருந்து வந்துள்ளவர்களுக்கு வடகிழக்கு மாநிலங்கள் அடைக்கலம் வழங்கக்கூடாது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என மிசோரம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறைஅமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் கடிதத்துக்கு மறுப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடந்த 18-ம் தேதி மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது கண்முன்னே மியன்மிரில் மிகப்பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றம், இனஅழிப்பு சம்பவங்கள் நடக்கிறது, இதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த மியான்மரும் கொந்தளிப்பாக இருக்கிறது, அப்பாவி மக்கள் கைது கைது செய்யப்பட்டும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ராணுவ ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். மியான்மருக்கும் மிசோரத்துக்கும் இடையே 510 கி.மீ தொலைவு எல்லைதான் பிரிக்கிறது. மியான்மரிலிருந்து தப்பித்து ஏராளமான மக்கள் நாள்தோறும் மிசோரம் வருகிறார்கள்.
மியான்மரில் வாழும் சின் சமூகத்தினர்,இன ரீதியாக மிசோரம் மக்களோடு தொடர்புடையவர்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.
மியான்மரில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்து இந்தியா கண்ணை மூடிக்கொள்ள முடியாது. மியான்மரில் இருந்து அரசியல் அகதிகளாக வருவோருக்கு உணவு, உடை, அடைக்கலம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். மியான்மர் மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை மிசோரம் பிரித்துப்பார்க்க முடியாது.
மியான்மரிலிருந்து வரும் அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஏற்க முடியாது என மத்திய உள்துறை தெரிவித்திருந்தது. இதை மிசோரம் அரசால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் வரும் என்பதை ஏற்கிறேன், இதை கவனமாகக் கையாள வேண்டும் என்பதை அறிவேன். அதேசமயம், மனிதநேய பிரச்சினைகளை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
இவ்வாறு சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.