Published : 21 Mar 2021 09:25 AM
Last Updated : 21 Mar 2021 09:25 AM

முககவசம் அணியாமல் விமானத்தில் தகராறு செய்த பயணி: காவலர்கள் வசம் ஒப்படைத்த விமான ஊழியர்கள்

கொல்கத்தா

நடுவானில் விமானத்திற்குள் முககவசம் அணியாமல் தகராறு செய்த பயணியை கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோலவே விமானப் பயணத்தின்போது பயணிகள் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருந்தது.

இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று சென்றது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் முகவசத்தை அணியாமல் இருந்தார்.

அவரிடம் விமான பணியாளர்கள் சென்று கட்டாயம் முகவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் தனக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறினார். விமான பயணத்தின்போது முவகவசம் அணிய வேண்டும் என்பது கட்டாய விதிமுறை, அதனை ஏற்க முடியாதவர்கள் பயணம் செய்யக் கூடாது என்ற விதிவுள்ளதாக விமான ஊழியர்கள் கூறினர்.

இதனையடுத்து சற்று நேரம் முககவசம் அணிந்த அவர் பின்னர் கழற்றி விட்டார். எனவே சகப்பயணிகளும் புகார் தெரிவித்தனர். இதனால் மீண்டும் சென்று ஊழியர்கள் அவரை முகவசம் அணியுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

அத்துடன் ஊழியர்களிடமும், சகப் பயணிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே அந்த விமானம் கொல்க்ததா விமான நிலையம் வந்து சேர்ந்தது. இதனையடுத்து அந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வசம் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் ஒப்படைத்தனர். அவர் மீது கரோனா விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x