

*
இந்தியாவில் உள்ள தனது அனைத்து ஆலைகளிலும் மீண்டும் உற்பத்தியை இன்று முதல் தொடங்கியுள்ளதாக நெஸ்லே மேகி நூடுல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் தங்களது வழக்கமான நூடுல்ஸ் தயாரிப்பு சூத்திரத்தின் அடிப்படையிலேயே உற்பத்தி தொடரும் என்பதையும் அந்த நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சுவிஸ் நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்பான மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமானது, மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக காரீயம் இருப்பதாக எழுந்த புகாராலும், எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுக்கோமேட்) என்ற சுவைகூட்டி குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்தியிருப்பதாலும், ஓட்ஸ் சுவை நூடுல்ஸ் போன்ற புதிய தயாரிப்புகளுக்கு உரிய அனுமதி வாங்கவில்லை என்பதாலும் தடை விதிப்பதாக தெரிவித்திருந்தது.
மேகி நூடுல்ஸ் வகையறாக்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் நெஸ்லே வழக்கு தொடர்ந்தது.
சட்ட விதிகளுக்கு புறம்பாக மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், தடை நீக்கப்படுகிறது என்றும், அரசு சோதனைக் கூடங்களில் மேகி நூடுல்ஸை ஆய்வு செய்து மீண்டும் விற்பனை செய்யலாம் என்று கூறியிருந்தது.
இதனையடுத்து பஞ்சாப், கோவா, கர்நாடகா மாநிலங்களில் முதற்கட்டமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களில் மேகி நூடுல்ஸ் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து மேகி நூடுல்ஸ் கடந்த 9-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து 5 மாத கால தடை நீக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்தியாவில் உள்ள மொத்தம் 5 ஆலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.