மகாராஷ்டிர முதல்வர் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே : படம் | ஏஎன்ஐ.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே : படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமராவதி, புனே, யவத்மால், லட்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லாக்டவுன் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாக்பூர் மாவட்டத்தில் லேசான தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரில் வெளியே வரும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆதித்யா தாக்கரே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் எனக்கு இருக்கின்றன. பரிசோதித்ததில் எனக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. என்னுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொருவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளாதீர்கள் என ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் முக்கியமானது. கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக புனேவில் 37,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூரில் 25,861 பேர், மும்பையில் 18,850 பேர், தானேவில் 16,735 பேர், நாசிக்கில் 11,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in