

மும்பையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் ரயில்நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் அவர்களின் ஒப்புதலின்றி கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பியது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. குறிப்பாக மும்பையில் கரோனா பரவல் தொடர்ந்த அதிகரித்து வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர் பெற்ற தாராவி உட்பட நகரம் முழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் மக்கள் தானாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்வதில்லை. கரோனா பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பல பகுதிகளிலும் சுற்றித் திரிவதால் வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய அரசின் அறிவுறுத்தல்படி கரோனாவை கட்டுப்படுத்த பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக மும்பையில் பொதுமக்கள் ஒப்புதலின்றி கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் ரயில்நிலையம், சந்தை, பேருந்து, மால்கள், பூங்காங்கள், கடற்கரை என அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே கட்டாயமாக உள்ளிட்ட இடங்களில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் கரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நடமாடும் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதுபோலவே கரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.