

ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த தத்தாத்ரேயா ஹொசபலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக நடந்த உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏபிபிஎஸ்) கூட்டத்தில், தத்தாத்ரேயா ஹொசபலேவைப் புதிய பொதுச்செயலாளராக நியமித்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து வந்த 73 வயது சுரேஷ் பையாஜி ஜோஷிக்கு பதிலாக இனி தத்தாத்ரேயா ஹொசபலே பொதுச் செயலாளராகச் செயல்படுவார்.
ஏபிபிஎஸ் ஆண்டுக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கும். ஆனால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்டிப்பாக நாக்பூரில் நடக்கும். ஆனால், இந்த முறை மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததையடுத்து, பெங்களூருவில் கூட்டம் நடத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் 1954-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் குடும்பத்தில் பிறந்தவர் தத்தாத்ரேயா ஹொசபலே. 1968-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஹொசபலே சேர்ந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பட்டம் படித்தவர் ஹொசபலே. 1978-ம் ஆண்டு ஏபிவிபி அமைப்பின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தத்தாரேயா, 15 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அவசரக் காலத்தில், ஹொசபலே மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அசாம் மாநிலம், குவஹாட்டியில் இளைஞர் மேம்பாட்டு மையத்தை அமைத்த பெருமை ஹொசபலேவைச் சேரும். அதன்பின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைச் செயலாளராக ஹொசபலே நியமிக்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் மூத்த உறுப்பினர், அனுபவம் மிக்கவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் நல்ல உறவைப் பராமரிப்பவர், பல்வேறு விஷயங்களைத் திறம்படக் கையாளும் திறமை படைத்தவர் என்பதால், ஹொசபலே பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.