

பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிய பிரதமர் மோடி இப்போது வங்கிகளை விற்பனை செய்து வங்கி மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அவர் உரையாற்றியதாவது:
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி அழித்து விட்டார். இன்று நாட்டில் சிறு தொழில்கள் தொடங்கி பெருந்தொழில்கள் வரை பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. இதற்கு பிரதமர் மோடியே காரணம். ஹால்டியா துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி ஆலோசித்து வருகிறார்.
அனைத்தையும் விற்பனை செய்து விடுவது என்பதே பிரதமர் மோடியின் ஒரே திட்டம். பணமதிப்பிழப்பு செய்த பிரதமர் மோடி இப்போது வங்கி மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.