

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணியே வெற்றி பெறும் என மாத்ருபூமி- சி-வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கேரளாவில் ஏற்கனவே 2 கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த இரண்டு கருத்துக் கணிப்புகளிலும் ஆளும் இடதுசாரிக் கூட்டணியே வெற்றி பெறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது மேலும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மாத்ருபூமி மற்றும் சி-வோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி 75 முதல் 83 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் காங்கிரஸ் கூட்டணி 56 முதல் 64 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 0-2 தொகுதிகளில் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இடதுமுன்னணி 40.9 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கூட்டணி 37.9 சதவீத வாக்குகளையும் பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணி 16.6 சதவீத வாக்குகளை பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
42.6 சதவீத மக்கள் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவாகவும், அதேசமயம் காங்கிரஸ் அணி சரியாக செயல்பட வில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அமர வேண்டும் என 34.4 சதவீத மக்கள் மட்டுமே கருத்துக் கூறிள்ளனர். எனினும் 20.1 சதவீத மக்கள் ஆளும் கூட்டணி அரசு மோசமில்லை எனவும் கூறியுள்ளனர்.