கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் இரட்டிப்பான வறுமை: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் இரட்டிப்பான வறுமை: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

Published on

கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் வறுமை இரட்டிப்பாகியுள்ளதாகவும் அதேவேளையில் சீனாவில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

ப்யூ ஆய்வு மையம் ( Pew Research Center ) மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரோனாவால் இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் குறித்து உலக வங்கி தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த அறிக்கை வெளியானது.

இந்தியாவில் முழு ஊரடங்கு காலத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். தனிநபர் வருமானம் சரிந்தது.
அதனால், இந்தியாவில் நடுத்தர மக்களின் நிலை சரிந்துள்ளது என இந்த அறிக்கை கூறுகின்றது.

கிட்டத்தட்ட 3ல் ஒரு நடுத்தரக் குடும்பம் பொருளாதாரத்தில் நலிவடைந்து அடுத்தகட்டத்துக்கு சரிந்துள்ளது என்றும், அதேபோல், அன்றாடம் ரூ.150க்கும் கீழ் தினக்கூலி பெறுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஒப்பீட்டு அளவில் சீன மக்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. சீன நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் வெறும் 2% மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆய்வறிக்கையின் முழு விவரம் வருமாறு:

இந்தியாவில், பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவால், நடுத்தர குடும்ப மக்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. அதாவது, 119.7 கோடியாக இருந்த நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை 116.2 கோடியாக சரிந்துள்ளது. (நடுத்தரவர்க்க குடும்பத்தினரை நிர்ணயிக்கும் வருமானம் அன்றாடம் ரூ.700 முதல் ரூ.1500 வரை எனக் கணக்கிடப்படுகிறது).

அதேபோல் பணக்கார வகுப்பாகக் கருதப்படும் அன்றாடம் ரூ.1500க்கும் மேல் சம்பாதிக்கும் வர்க்கத்தினர் எண்ணிக்கை 30% சரிந்து 1.8 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் தொகை அன்றாடம் ரூ.150 முதல் ரூ.700 வரை வருமானம் ஈட்டும் பிரிவுக்கு சரிந்துள்ளது.

குறிப்பாக அன்றாடம் ரூ.150க்கும் கீழ் ஊதியம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக அதிகரித்துள்ளது. நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று என்று ப்யூ ஆய்வு மையம் கூறுகின்றது.

இந்தியாவில் எல்லா வர்க்கத்திலும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் சரிவு வெறும் 1 கோடி என்றளவிலேயே இருக்கிறது. ஏழை மக்களின் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இவ்வாறு ப்யூ ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in