துரியோதனன், துச்சாதனன் எங்களுக்கு வேண்டாம்: பாஜக.வுக்கு எதிராக முதல்வர் மம்தா ஆவேசம்

துரியோதனன், துச்சாதனன் எங்களுக்கு வேண்டாம்: பாஜக.வுக்கு எதிராக முதல்வர் மம்தா ஆவேசம்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக தலைவர்களை மகாபாரத வில்லன் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல்கட்ட தேர்தல் 27-ம் தேதி நடைபெகிறது. பல்வேறு கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புரூலியா மாவட்டத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசும்போது, “மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்துக்கான கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது. மே 2-ம் தேதி மம்தா விடை பெறுகிறார். இங்கு உண்மையான மாற்றம் வரவுள்ளது” என்றார்.

இந்நிலையில் கிழக்கு மிட்னாபூரில் திரிணமூல் வேட்பாள ருக்கு ஆதரவாக முதல்வர் மம்தா நேற்று பேசும்போது, “பாஜகவுக்கு குட்பை சொல்லி விடுங்கள். பாஜக நமக்கு வேண்டாம்.

பிரதமர் மோடியின் முகத்தை நாம் பார்க்க விரும்பவில்லை. கலவரங்களையும் கொள்ளை யர்களையும் நாம் விரும்பவில்லை. துரியோதனன், துச்சாதனன் மீர்ஜாபர் போன்றோர் நமக்கு வேண்டாம்” என்றார்.

முதல்வர் மம்தாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்த சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். நந்திகிராம் தொகுதியில் அவர் மம்தாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அவரை கண்மூடித்தனமாக தாம் நம்பியதாகவும் அவர் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் மம்தா புகார் கூறினார்.

இதுகுறித்து மம்தா பேசும்போது, “கடந்த 2014 முதல் அவர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களை கண்மூடித்தனமாக நம்பியதற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சவுகதா ராய், மகுவா மொய்த்ரா, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம் சென்றனர். மேற்கு வங்கத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமாக தேர்தலை உறுதிசெய்யும்படி வலியுறுத்தியதாக இவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மகுவா மொய்த்ரா கூறும்போது, “தேர்தல் ஆணையத்தில் முக்கியமாக 3 பிரச்சினைகளை நாங்கள் எழுப்பினோம். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர்கள் வரை மத்தியப் படைகளை மட்டுமே நிறுத்த திட்டமிட்டிருப்பது, ஒப்புகை சீட்டுக்கான விவிபாட் கருவிகள் அனைத்தையும் பரிசோதிக்காமல் 5 சதவீத கருவிகளை மட்டுமே பரிசோதிப்பது, முதல்வர் மம்தா தொடர்புடைய மார்ச் 10-ம் தேதி சம்பவம் ஆகியவற்றை எழுப்பினோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in