

கர்நாடகாவில் பருப்பு வர்த்தக நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பருப்பு வர்த்தக கூட்டமைப்பினர் நேற்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் பருப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு திடீரென உயர்ந்தது. இதற்கு வர்த்தகர்கள் பதுக்கியதே காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உணவு மற்றும் பொது வழங்கல் துறை அதிகாரிகள் உரிமம் இல்லாமல் பருப்பு வைத்திருக்கும் வர்த்தக நிறு வனங்களில் அதிரடி சோதனை நடத் தினர். அப்போது 1300 கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2.35 லட்சம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகளின் சோதனையை கண்டித்து கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பின் சார்பாக நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில் 144 கர்நாடக பருப்பு வர்த்தகர் அமைப்புகள் பங்கேற்றன.
வேலை நிறுத்தத்தால், யஷ்வந்த் பூர் சந்தையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பருப்பு கிடங்குகள் மூடப் பட்டு, லாரிகள் நிறுத்தி வைக்கப் பட்டன. மைசூரு, குல்பர்கா, பெல்காம் ஆகிய இடங்களில் உள்ள பெரிய சந்தைகளிலும் அனைத்து கிடங்குகளும் மூடப்பட்டன. அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பருப்பு லாரிகளும் நிறுத் தப்பட்டன.
இது தொடர்பாக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் சந்திர லஹோட்டி கூறும்போது, '' பருப்பு வர்த்தக நிறுவனங்கள், உணவு கிடங்கு களில் அத்துமீறி சோதனை நடத்து வதை அரசு நிறுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட பருப்பு வகைகளை வர்த்தக நிறுவனங்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கடந்த 5 வருடங்களாக பருப்பு வர்த்தக நிறுவனங்களுக்கு வழங் கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள உரிமத்தை வழங்க வேண்டும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக ரூ. 30 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இறுதி தீர்வு எட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும்''என்றார்.
இது தொடர்பாக கர்நாடக உணவுத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது,'' தீபாவளி நெருங்கும் நிலையில் பருப்பு வர்த்தகர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் சந்தையில் பருப்பு விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே பருப்பு வர்த்தக அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காணப்படும். அதே நேரத்தில் உரிமம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக பருப்பை பதுக்குவோரை கண்டுபிடிக்க, அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்துவார்கள்” என்றார்.