‘‘நீங்கள் பிரதமர் மோடியின் கரோனா தடுப்பு மருந்தை தான் போட்டுக் கொள்ள வேண்டும்’’ - மம்தா பானர்ஜியை கிண்டல் செய்த சுவேந்து அதிகாரி

‘‘நீங்கள் பிரதமர் மோடியின் கரோனா தடுப்பு மருந்தை தான் போட்டுக் கொள்ள வேண்டும்’’ - மம்தா பானர்ஜியை கிண்டல் செய்த சுவேந்து அதிகாரி
Updated on
1 min read

பிரதமர் மோடியை நாள்தோறும் அவமரியாதையாக பேசும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் கரோனா தடுப்பு மருந்தை தான் போட்டுக் கொள்ள வேண்டும், வங்கதேசத்தில் கரோனா தடுப்பு மருந்து இல்லை என சுவேந்து அதிகாரி கூறினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த தலைவரும், மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் எதிர்த்து போட்டியிடுபவருமான சுவேந்து அதிகாரி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘‘மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை நாள்தோறும் அவமரியாதையாக பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமர் என்ற மரியாதையை கூட மோடிக்கு மம்தா தருவில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக பேசுவது பாரத மாதவுக்கு எதிராக பேசுவதற்கு சமம். இதனை மம்தா பானர்ஜி உணரவில்லை.

பிரதமர் மோடியை அவமரியாதையாக பேசும் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் கரோனா தடுப்பு மருந்தை தான் போட்டுக் கொள்ள வேண்டும், கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள பாகிஸ்தானுக்கோ, வங்கதேசத்துக்கோ செல்ல முடியாது. ஏனெனில் அங்கு கரோனா தடுப்பு மருந்து இல்லை’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in