

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 39,726 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டு பிறந்ததில் இருந்து ஒரே நாள் பாதிப்பில் நேற்றைய தினம் (மார்ச் 17) பதிவானதே அதிகம்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
நாடுமுழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 39,726 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 1,15,14,331 கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1,10,83,679 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 2,71,282 கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 154 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், இதுவரை மொத்தம் 1,59,370 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில், நாடு முழுவதும் மொத்தம் 3 கோடியே 93 லட்சத்து 39 ஆயிரத்து 817 பேருக்குக் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. நேற்று வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் 25,833 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த 2020 செப்டம்பரில் ஒரே நாளில் 24,886 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மகாராஷ்டிராவில் நேற்றைய பாதிப்பே அதிகம். நேற்று மட்டும் அங்கு 58 பேர் பலியாகினர். அம்மாநிலத்தில் பல மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் தொடர்ந்து கரோனா பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகியவற்றில் மக்கள் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.