Published : 21 Nov 2015 04:03 PM
Last Updated : 21 Nov 2015 04:03 PM

வேலைவாய்ப்பு முதல் வரிகள் வரை: ஆசியான் மாநாட்டில் மோடி உதிர்த்த 10 முத்துக்கள்

10-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும், 13-வது ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார்.

ஆசியான் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "21–ம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானதாக இருக்கும்" என்றார்.

அவர் பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்:

1.வெளிப்படையான வரி நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. வெளிப்படையான, முன் கூட்டியே கணிக்கக் கூடிய வரி நிர்வாக நடைமுறை அமலுக்கு வந்தால் முதலீட்டாளர்களும் வரி செலுத்துவோரும் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும்.

2.இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே எங்கள் லட்சியம்.

3.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவை உற்பத்தி மையமாக்க வேண்டும்.

4.இயற்கை வளங்களை கையாள்வதில் எனது அரசு சட்டம் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிலக்கரி, அலைக்கற்றை என அனைத்து வளங்களையும் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுகிறது.

5.இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்திய ஜனநாயக நெறிகளும், நீதித் துறையும் உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும். இந்தியாவில் தொழில் முதலீட்டை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் போர்க்கால வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

6.சர்வதேச அளவில் நிதி நெருக்கடி இருந்தாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது என உலக வங்கி கூறியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

7.பல்வேறு சமூக நலத்திட்டங்கள் இந்திய அரசு வகுத்துள்ளது. இன்சூரன்ஸ் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம், அனைவருக்கும் வீடு ஆகியனவற்றை அரசு செயல்படுத்துகிறது.

8.கடந்த 18 மாதங்களாக இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளார்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது, அந்நிய முதலீடு உயர்ந்துள்ளது.

9. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2016-ல் இச்சட்டம் அமலுக்கு வரும் என நம்புகிறோம். இது நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு சட்டம் நடைமுறைக்கு வரும்.

10. 21–ம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x