

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதியில் முக்கியமானதாக கழக்கூட்டம் தொகுதி அமைந்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை எதிர்த்து பாஜக சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன் களமிறங்குகிறார்.
பிரச்சார பீரங்கி, தடாலடியாகப் பேசுபவர், அனல் பறக்கும் கருத்துகளைக் கூறுபவர் என்று கூறப்படும் ஷோபா சுரேந்திரன் கழக்கூட்டம் தொகுதியில் கடக்கம்பள்ளி சுரேந்திரனை எதிர்த்துப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட பின் கழக்கூட்டம் தொகுதி அதிகமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் தொகுதியில் இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடக்கம்பள்ளி சுரேந்திரனும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் எஸ்.எஸ்.லாலும் போட்டியிடுகின்றனர்.
இந்த இரு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டபோது எந்தவிதமான பரபரப்பும் இல்லை. ஆனால், பாஜக சார்பில் எந்த வேட்பாளர் களமிறங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மாநிலத் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன் அறிவிக்கப்பட்டதும் தொகுதிக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
2.50 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட கழக்கட்டம் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலான இந்துக்கள், லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பெரும்பாலும் இருக்கின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இந்தத் தொகுதியில் தனது வாக்கு வங்கியை 25 சதவீதமாக உயர்த்திக் கொண்டது. பாஜக செல்வாக்கு பெற்றுத் திகழும் தொகுதிகளில் இப்போது கழக்கூட்டமும் ஒன்றாக மாறியுள்ளது.
அதிலும் மாநிலத்தில் சபரிமலை விவகாரம் எழுந்தபோது, பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன் செய்த போராட்டங்கள், பிரச்சாரங்கள் போன்றவை மக்கள் மத்தியில் ஆழமாகக் கட்சியை எடுத்துச் சென்றுள்ளன.
ஆதலால், இந்த முறை கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு எதிராக ஷோபாவை பாஜக களமிறக்கியுள்ளதால், அவர் கடுமையான போட்டி அளிப்பார் என்று வேட்பாளர் அறிவிக்கப்படவுடனே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துவிட்டார்கள்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கழக்கூட்டம் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் முரளிதரன் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால், இந்த முறை பாஜக எளிதாக வெற்றியைப் பறிகொடுக்கத் தயாராக இல்லை என்பதால்தான் ஷோபா சுரேந்திரனைக் களமிறக்கியுள்ளது.
சபரிமலை விவகாரம் இந்த முறை கழக்கூட்டம் தொகுதிக்கு மட்டுமல்லாமல் கேரளத் தேர்தலில் பெரும் விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இடதுசாரி கூட்டணி சார்பில் சபரிமலை விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு குறித்துத் தெளிவான திட்டம், கருத்து எதையும் கூறவில்லை.
கழக்கூட்டம் தொகுதியில் போட்டியிடும் கடக்கம்பள்ளி சுரேந்திரனும்கூட இதுவரை சபரிமலை விவகாரத்தில் தனது கட்சியின் நிலைப்பாட்டைப் பிரச்சாரத்தில் பேசவில்லை. இந்த விவகாரத்தை ஷோபா சுரேந்திரன் எழுப்பி இடதுசாரிகளுக்கும், சுரேந்திரனுக்கும் கடும் நெருக்கடி அளிப்பார் எனத் தெரிகிறது.