Published : 18 Mar 2021 05:40 PM
Last Updated : 18 Mar 2021 05:40 PM

கேரளத் தேர்தல்: பினராயி விஜயன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டை எதிர்க்கும் 3 பெண்களும், சவால்களும் 

லத்திகா சுபாஷ், வாளையார் சகோதரிகளின் தாய் (நடுவில்), கே.கே.ரேமா | கோப்புப் படம்.

கோழிக்கோடு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான பெண்கள் பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், இந்த 3 பெண்கள் போட்டியிடும் தொகுதி மீதும், அவர்கள் விடுத்துள்ள சவால்கள் மீதும் நாளுக்கு நாள் ஈர்ப்பு குவிந்து வருகிறது.

இந்த 3 பெண்களின் தனிப்பட்ட எதிர்ப்புக் குரல்கள், வலிமையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும், முதல்வர் பினராயி விஜயனையும் அசைத்துப் பார்க்கப் போவதில்லை என்றாலும், இவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

உம்மன் சாண்டி -- லத்திகா சுபாஷ்

எட்டமனூர்

காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த லத்திகா சுபாஷுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. கட்சியின் மீது மிகவும் அதிருப்தி அடைந்த லத்திகா, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் முன் தனது தலையை மழித்துக்கொண்டார். எட்டமனூர் தொகுதியில் சீட் கொடுக்காததால், சுயேச்சையாக லத்திகா களமிறங்கப் போகிறார்.

எட்டமனூரில் லத்திகா சுபாஷ், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டால் அவரின் செல்வாக்கிற்கும், மக்கள் அவர் மீதான மரியாதைக்கும் நிச்சயம் அவரால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். ஆனால், தற்போது லத்திகாவுக்கு காங்கிரஸ் கட்சி சீட் மறுத்துவிட்டால், சுயேச்சையாகக் களமிறங்கும் லத்திகாவால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்துக்குள்ளாகி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தன்னை வளர்த்துவிட்ட கட்சிக்கு எதிராகவே சவால்விட்டுத் தேர்தலில் குதித்துள்ள லத்திகாவின் போராட்டமும், பிரச்சாரமும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தர்மதம்

முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தொகுதி தர்மதம் தொகுதியாகும். இங்கு வேட்புமனுத் தாக்கலையும் முடித்த பினராயி விஜயன் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். ஆனால், தர்மதம் தொகுதியில் பினராயி விஜயனைத் தோற்கடிப்பேன் என்று களமிறங்க உள்ளார் வாளையார் சகோதரிகளின் தாய்.

பாலக்காடு மாவட்டம், வாளையாரைச் சேர்ந்த மைனர் தலித் சகோதரிகள் இருவரையும் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை என்று அந்தச் சிறுமிகளின் தாய் போராடப் புறப்பட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பாலக்காடு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. தனது மகள்களுக்கு நீதி கேட்டு முதல்வர் பினராயி விஜயனிடம் வாளையார் தாய் முறையிட்டார்.

கொல்லப்பட்ட இரு சிறுமிகளில் ஒரு சிறுமியின் பலாத்காரக் கொலையை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் பரிந்துரைத்தார். ஆனால், 2-வது மகள் பலாத்காரக் கொலைக்கு ஆதாரங்கள் இல்லை என அரசு மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தத் தாய், தனது மகள்களுக்கு நீதி கேட்டுக் கடந்த மாதம் பொதுவெளியில் தனது தலையை மொட்டையடித்து கண்ணீருடன் நீதி கேட்டார். 14 மாவட்டங்களுக்கும் பயணித்து தனது மகள்களுக்கு நீதி கேட்பேன் என அந்தத் தாய் புறப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தர்மதம் தொகுதியில் போட்டியிடுவேன் என வாளையார் சகோதரிகளின் தாய் சவால் விடுத்துள்ளார். பினராயி விஜயனை வெல்வது எளிதான காரியம் அல்ல என்றாலும், வாளையார் சகோதரிகளின் கொடூரக் கொலையும், அந்தத் தாயின் கண்ணீரும், தேர்தலில் அதிர்வலையைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

கே.கே.ரேமா

வடகரா

வடகராவில் புரட்சிகர சோசலிஸ்ட் இந்தியா கட்சியின் தலைவர் டி.பி.சந்திரசேகரின் மனைவி கே.கே.ரேமா. சந்திரசேகரனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டும் ரேமா, அந்தக் கட்சியினருக்கு எதிராகக் களம் காண்கிறார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சுயேச்சையாகக் களமிறங்கி வெல்வது சாத்தியமில்லை என்றாலும், பின்புலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ரேமா போட்டியிடுகிறார். இந்த 3 பெண்களும் கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x