மகா கூட்டணி 190 தொகுதிகளுடன் பிஹாரில் ஆட்சி அமைக்கும்: லாலு உறுதி

மகா கூட்டணி 190 தொகுதிகளுடன் பிஹாரில் ஆட்சி அமைக்கும்:  லாலு உறுதி
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் 243 தொகுதிகளில் 190 தொகுதிகள் பெற்று மகா கூட்டணி ஆட்சி அமைக்கும் எனும் லாலு பிரசாத் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில் துவங்கி இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்துள்ள ஐந்து கட்ட தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்து வந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு, இன்று உற்சாகத்துடன் காணப்பட்டார். வழக்கமான தன் நகைச்சுவை பாணியில் பாட்னாவின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமது மகா கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் லாலு கூறுகையில், ''ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்து மகா கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். எனவே, 8 ஆம் தேதி வெளியாக உள்ள முடிவுகளில் ராஷ்ட்ரிய ஜனதாவிற்கு அதிக தொகுதிகள் கிடைத்தாலும் நிதிஷ்குமாரே முதல் அமைச்சராக பதவி ஏற்பார். இந்த தேர்தலில் முதல் விஷயமாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோகன் பாக்வத் ஒதுக்கீடுகள் மீது கூறிய கருத்து பிஹார்வாசிகளை அச்சப்படுத்தியது'' என கூறினார்.

பிஹாரின் 243 தொகுதிகளில் லாலு மற்றும் நித்திஷ் தலா 101 தொகுதிகளிலும் மீதமுள்ளவற்றில் காங்கிரஸும் பங்கிட்டு போட்டியிட்டிருந்தனர். இவர்களது மகா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவியது. இதில், பிரதமர் நரேந்தர மோடி நேரடியாக களம் இறங்கி தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். இதில், அவர் மகா கூட்டணியின் தலைவர்கள் மீது வைத்த கடுமையான விமர்சனங்களை கண்டிக்கும் வகையில் லாலு கருத்து கூறினார்.

இது பற்றி லாலு, ''இவர்கள் வாக்காளர்கள் இடையே மதவாதத்தை கிளப்ப முயன்று தோல்வி அடைந்தனர். மோடி என்னை ‘சைத்தான்’ என்றார். இவ்வாறு அவர் பிஹார்வாசிகளை விமர்சித்ததை யாரும் விரும்பவில்லை. பிஹாரில் தேஜமுக்கு கிடைத்த தோல்வி இனி வர இருக்கும் மற்ற மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களிலும் பிரதிபலிக்கும்'' எனத் தெரிவித்தார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேஜமு, தம் புதிய உறுப்பினராக பிஹாரின் முன்னாள் முதல்வரான ஜிதன்ராம் மாஞ்சியை தம்முடன் சேர்த்து கூட்டணி அமைத்தது. இதில், பாஜக 160, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 40, உபேந்தர் குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா 23 மற்றும் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 20 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in