

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசில், கிரிமினல் குற்றம், வன்முறை, ஊழல்தான் நடக்கிறது, பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. இரு கட்சிகளுக்கும்தான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
புர்லியா மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:
இந்த மாநிலத்துக்குத் தீதி (மம்தா) என்ன செய்திருக்கிறார். குற்றங்கள், குற்றவாளிகள் பெருகியுள்ளார்கள், ஆனால், சிறையில் அடைக்கப்படவில்லை. மாஃபியாக்கள், ஊடுருவல்காரர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள். கூட்டணி அமைத்து ஊழல் செய்கிறார்கள், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் 24 வடக்கு பர்கானா மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அதற்கு பாஜக தொண்டர்கள் மீது பழிசுமத்துகிறார்கள். இங்குள்ள சூழல் சரியானதாக இல்லை. பழிவாங்குதல், வன்முறை, அட்டூழியம், மாஃபியா ஆட்சி போன்றவற்றை இதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாது.
வங்காள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கும். மாநிலத்தில் ஒவ்வொரு கிரிமினல் குற்றவாளியும் தண்டிக்கப்படுவார்கள். பாஜகவின் ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மக்களின் மனதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை நீக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. இதனால்தான் என்னைப் பார்த்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் எரிச்சல் அடைகிறார்.
ஆனால் என்னைப் பொருத்தவரை மம்தா எனக்கு மகளைப் போன்றவர். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மகள்களில் மம்தாவும் ஒருவர். அதனால்தான் மம்தாவுக்குக் காலில் ஏற்பட்டுள்ள காயத்தை நினைத்து வருத்தப்படுகிறேன். அவரின் காயம் விரைவாகக் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குப் பெயருக்கான அர்த்தமே மாறிவிட்டது. டிரான்பர் மை கமிஷன் பாலிசி (டிஎம்சி) என்ற நிலைக்கு வந்துவிட்டது. மம்தா ஜன்தன் கணக்கைப் பார்த்து அச்சப்படுகிறார் கோடிக்கணக்கான ஜன்தன் வங்கிக்கணக்குகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. நண்பர்களே, மம்தா தலைமையிலான அரசு ஆட்சியிலிருந்து இறங்குவதற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.