

அரசியல் கட்சிகள் பெறும் நிதியிலும், வங்கிக்கணக்குகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு வரும் 24-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தேர்தல் நிதிப்பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை, அரசியல் கட்சிகள் பெறும் நிதியிலும், வங்கிக்கணக்கிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனை செய்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் 5 மாநிலத் தேர்தல் வரும் 27-ம் தேதி முதல் படிப்படியாகத் தொடங்கும் நிலையில் தேர்தல் நிதிப்பத்திரங்களை விற்பனையை தொடங்கக்கூடாது எனக் கேட்டு ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அமைப்பு சார்பில் புதிதாக ஓர் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருநத்து.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில் " கடந்த 2 ஆண்டுகளாக ஏற்கெனவே நாங்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. தேர்தல் நிதிப்பத்திரங்களால் சட்டவிரோதப் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது இது பொருளாதாரத்தை அழித்துவிடும் என தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளன. ஏப்ரல் 1ம் தேதி மீண்டும் தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனை தொடங்குவதாக தெரியவந்துள்ள நிலையில் அதை நிறுத்த வேண்டும், அதற்குள் மனுவை விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, " தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கெனவே நாங்கள் ஒருமுறை தள்ளுபடி செய்தோமே" எனக் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த பிரசாந்த் பூஷன் " அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் சட்டவிரோதப் பணம் பரிமாற நிதிப்பத்திரங்கள் உதவுகின்றன" எனத் தெரிவி்த்தார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், " இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிடுவார்" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, வரும் 24-ம் தேதி(புதன்கிழமை) இந்த புதிய மனுவை விசாரணைக்கு எடுக்கிறோம் எனத் தெரிவித்தனர்.