

5.9 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை எண்ணும்போது பெருமிதம் கொள்கிறேன், ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கரோனா தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்துள்ளன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘வெளிநாடுகளுக்கு 5.9 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை எண்ணும்போது பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கரோனா தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன்.
இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.
தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கரோனாதான் மக்களை வெல்கிறது. மக்களுக்கு தேவைக்கேற்ப கரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். கரோனா தடுப்பூசிக்காக கரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்ற அதிகாரத்துவ தடைகளை விலக்க வேண்டும். நடமாடும் முகாம்கள் மூலமாகவும் கரோனா தடுப்பூசிபோட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.