Published : 18 Mar 2021 12:09 PM
Last Updated : 18 Mar 2021 12:09 PM

கேரளாவில்  பாஜக- இடதுசாரிகள்  ரகசிய கூட்டணி அம்பலம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி வெளியிட்ட தகவல்: உம்மன் சாண்டி பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்

கேரளாவில் காங்கிரஸ் அணிக்கு எதிராக பாஜக- இடதுசாரிகள் அமைத்துள்ள ரகசிய கூட்டணி அம்பலமாகியுள்ளது, இதனை கேட்டு மதச்சார்பற்ற மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கூறியுள்ளதாவது:

கேரளாவில் வெற்றி பெறுவதற்காக இடதுசாரி கூட்டணி பாஜகவுடன் ரகசிய உடன்பாடு செய்துள்ள விவரம் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வெளியிட்ட தகவலால் அம்பலமாகியுள்ளது. பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டு பின்னர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத ஆர்எஸ்எஸ் நிர்வாகி பாலசங்கர் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

தெற்கு கேரளாவில் சில தொகுதிகளை பாஜகவுக்கு விட்டு தரவும், அதற்கு பதிலாக மற்ற தொகுதிகளில் இடதுசாரி கூட்டணிக்கு பாஜக வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு கேரளாவின் மதச்சார்பற்ற மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோகன்தாஸ் தங்கள் அமைப்பின் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் காங்கிரஸ், முஸ்லிம், கிறிஸ்தவ கூட்டணியை வீழ்த்த இடதுசாரி கட்சி தொண்டர்கள் பாஜகவுடன் கரம் கோர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் பாஜக- சிபிஎம் ரகசிய கூட்டணி அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x