Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

தேசிய தொலை மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

நாடு முழுவதும் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய தொலைமருத்துவ சேவை என அழைக்கப்படும் இ-சஞ்சீவனி (ஏபி-எச்டபிள்யுசி) திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்தது. இதன்படி, வரும் 2022-க்குள் நாடு முழுவதும் உள்ள துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் என 1.55 லட்சம் மையங்களை ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு மையங்களாக (ஏபி-எச்டபிள்யுசி) மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மருத்துவருக்கும் மற்றொரு மருத்துவருக்கும் இடையே இந்த சேவை வழங்கப்படுகிறது. இதன்படி இதுவரை 9 லட்சம் ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.

இதுபோல, கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இ-சஞ்சீவனி புறநோயாளிகள் பிரிவு (ஓபிடி) சேவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர்கள் இணைய வழியில் வழங்கி வருகின்றனர். 250-க்கும் மேற்பட்ட ஓபிடி மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் இதுவரை 21 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இப்போது 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இ-சஞ்சீவனி சேவை அமலில் உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் தினமும் 35 ஆயிரம் நோயாளிகள் இணைய வழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். அதிக ஆலோசனை பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த தகவலை மத்தியசுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x