Last Updated : 18 Mar, 2021 03:14 AM

 

Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

தேர்தலுக்கு தனிச்சின்னம் பெற்று விதிமீறும் அரசியல் கட்சிகள்- நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் தேர்தல் ஆணையம்?

புதுடெல்லி

மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் புதிய மற்றும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் தனிச் சின்னங்களை ஒதுக்குகிறது. தனிச் சின்னம் பெறும் கட்சிகள், மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 5 சதவிகித எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும்.

தேர்தல் முடிவுகளில் அக்கட்சி 3 சதவிகித தொகுதிகளில் வெற்றி அல்லது 6 சதவிகித வாக்குகள் பெற்று விட்டால், அந்த சின்னம் அக்கட்சிக்கானதாக ஒதுக்கப்படும். இத்துடன் ஆணையத்தின் அங்கீ காரம் பெற்ற கட்சியாகி, அதன் சின்னமும் அதற்குரியதாகி விடும். இடையில் ஏதாவது ஒரு தேர்தலில் ஆறுக்கும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனது அங்கீகாரத்துடன், சின்னத்தையும் அக்கட்சி இழக்கும்.

கடந்த தேர்தல்களில் தான்போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை குறிப்பிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர் களுக்காக தனிச் சின்னங்கள் கோரி வந்தன. இதற்கு ஒதுக்கப்பட்டவை தவிர மற்ற தொகுதிகளில் அதே சின்னத்தை வேறு கட்சி அல்லது சுயேச்சைகளுக்கு ஆணையம் ஒதுக்கி வந்தது. இதனால், தனிச்சின்னம் பெற்ற கட்சிகள் அதை பிரபலப்படுத்தும் பலனை வேறு தொகுதிகளில் மற்றவர்கள் பெறும் சூழல் இருந்தது. இதை தடுக்க கட்சிகள் ஒரு புதிய உத்தியை கையாளத் தொடங்கின.

ஏமாற்றும் கட்சிகள்

இதில், மக்களவை, சட்டப்பேரவைக்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாகக் கோரி சின்னம் பெறும் வழக்கம் ஏற்பட்டது. இதில் கூறும் உறுதிப்படி அனைத்திலும் இல்லாமல் ஒரு சில தொகுதிகளில் மட்டும் அக்கட்சிகள் போட்டியிட்டு வந்தன.

இதுபோல், விதிகளை மீறும் கட்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் பல கட்சிகள் விதிகளை மீறியும் அவர்கள் மீது ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘நாடு முழுவதிலும் சின்னங்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் விதிகளை மீறுவது அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு கட்சி மீது எடுக்கும் நடவடிக்கை, கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போலாகி விடும் என்பதால் ஆணையம் மவுனம் காக்க வேண்டி உள்ளது. மேலும், தனது பெரும்பாலான அதிகாரங்களை ஆணையத்தால் செயல்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. சின்னம் விவகாரத்திலாவது ஒரு புதிய முடிவை எடுத்து, வரும் தேர்தல்களில் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர்.

திரும்ப ஒப்படைப்பு

தேர்தலுக்காக பெற்ற சின்னங்கள் இந்த முறை திரும்ப ஒப்படைப்பதும் முதல் முறையாக அரங்கேறி உள்ளது. மக்கள் சேவைக் கட்சி எனும் பெயரில் ஒரு புதிய கட்சி 2018-ல் பதிவானது. ரஜினி மன்ற ரசிகர்களால் தொடங்கப்பட்ட இக்கட்சியை, ரஜினி தனது கட்சியாக அறிவித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக பேச்சுக்கள் எழுந்தன. இதற்காக, ஒதுக்கப்பட்ட ஆட்டோ சின்னம் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், தனது வேட்பாளர்களுக்கு என கத்தரிக்கோலை தனிச் சின்னமாகப் பெற்ற மனிதநேய மக்கள் கட்சியும் அதை திரும்ப ஒப்படைத்துள்ளது. இதற்குஅக்கட்சிக்கு திமுக கூட்டணியில் கிடைத்த 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது காரணம். இக்கட்சிகள் இரண்டுமே அதற்கான காரணமாக தாம் இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளன. இதுபோல், திரும்ப ஒப்படைக்கப்படும் சின்னங்களை இனி வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x