

கேரளாவின் கழக்கூட்டம் தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷோபா சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்குள்ள 140 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பாஜக 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் மானந்தவாடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிகண்டன், போட்டியிட மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மானந்தவாடி உட்பட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இதில் மாநில பாஜக துணைத்தலைவர் ஷோபா சுரேந்திரன், கழக்கூட்டம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு சிக்கல்
கழக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு இவர் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கடந்த 2016 தேர்தலில் பாஜக இரண்டாமிடம் பிடித்தது. பாஜக மாநிலங்களவை எம்.பி. வி.முரளீதரன், கடந்த முறை இங்கு போட்டியிட்டு, 42,732 வாக்குகள் பெற்றார். இது மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுரேந்திரன் பெற்ற வாக்குகளை விட 8,000 மட்டுமே குறைவாகும். எனவே பாஜகவின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக கழக்கூட்டம் உள்ளது.
மற்ற 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் மானந்தவாடியில் முகுந்தன் பல்லியாரா நிறுத்தப்பட்டுள்ளார்.
கருநாகப்பள்ளி வேட்பாளராக பிட்டி சுதீரும் கொல்லம் தொகுதி வேட்பாளராக எம்.சுனிலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்களில் மெட்ரோமேன் ஸ்ரீதரன், முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.