இருவேறு வாக்காளர் பட்டியல்களில் பெயர்; பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் புகார்

இருவேறு வாக்காளர் பட்டியல்களில் பெயர்; பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் புகார்
Updated on
1 min read

மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸுக்கும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், இவ்விரு கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில்தான் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியும் போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸில் இருந்துவிலகி அண்மையில் பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் பெரும் செல்வாக்கு பெற்றவர் ஆவார். பல முறை அவர் அத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். இதன் காரணமாக, இந்ததேர்தல் களம் முதல்வர் மம்தாபானர்ஜிக்கு பெரும் சவாலாகஇருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி தாக்கல் செய்திருக்கும் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரி, அத்தொகுதி தேர்தல் பதிவு அதிகாரியிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் நேற்றுகடிதம் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நந்திகிராம் மற்றும் ஹால்டியா ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களிலும் சுவேந்து அதிகாரியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 17-வது பிரிவு இதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல், நந்திகிராம் தொகுதியில் தாம் வசித்து வருவதாகவும் சுவேந்து அதிகாரி தனது வேட்பு மனுவில் கூறியிருக்கிறார். ஆனால், அங்குஅவர் வசிக்கவில்லை. இவ்வாறுதவறான தகவல்களை அளித்திருப்பதால் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தம் மீதான குற்றவழக்குகளை முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனுவில் குறிப்பிடாததால், அவரது வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரி தேர்தல் அதிகாரியிடம் சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in