

5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் தொடங்கவே இல்லை. ஆனால், அதற்குள்ளாக ரூ.331 கோடி தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட தொகையைவிட, இப்போது தேர்தல் நடக்கும் முன்பே அதிகரித்துவிட்டது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 5 மாநிலத் தேர்தல் வாக்குகள் அனைத்தும் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம், பரிசுப்பொருட்கள், கணக்கில் வராத பணம் ஆகியவற்றைப் பிடிக்க தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் இன்னும் முதல் கட்ட வாக்குப்பதிவு கூட தொடங்காத நிலையில் தேர்தல் பறக்கும் படையினரால், ரூ.331 கோடிக்குப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கறுப்புப் பணம், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றைப் பிடிக்க 295 கண்காணிப்பாளர்கள் 5 மாநிலங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சிறப்புக் கண்காணிப்பாளர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்பிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரூ.112.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் 259 தொகுதிகள் வாக்காளர்களுக்கு அதிகமான செலவு செய்யக்கூடிய பதற்றமான தொகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் மட்டும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது''.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.