

எதிரி நாட்டு செயற்கைக்கோள் களைக் கண்காணிக்கவும், ஏவுகணை அச்சுறுத்தலைக் கண்டறியவும் உதவும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் விரைவில் இணையவுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கப்பல் பயன்பாட்டுக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐஎன்எஸ் துருவ் கப்பலானது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பல் ஆகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (என்டிஆர்ஓ) ஆகியவற்றால் இந்தக் கப்பல் உருவாக்கப் பட்டுள்ளது. 'இந்துஸ்தான் ஷிப்யார்ட்' நிறுவனத்தால் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் கட்டமைக் கப்பட்டுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் விரைவில் இந்தியக் கடற்படையில் இணையும்என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை. ஐஎன்எஸ் துருவ் கப்பலில் அதிநவீன மின்னணு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இந்தியப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை எளிதில் அடையாளம் கண்டு ராணுவத்துக்கு தகவல் அளிக்க முடியும். அதுமட்டுமின்றி, இந்தியாவை நோக்கி வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் கண்டறிந்துவிடும். மேலும், இந்திய – பசிபிக் பிராந்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் உண்மையான திறனையும் இக்கப்பலால் மதிப்பிட முடியும்.
ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் இணையும்பட்சத்தில், பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களைக் கொண்ட 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். தற்போது வரை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டும்தான் இந்தக் கண்காணிப்பு ரக கப்பல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எஸ் துருவ் கப்பலால் கடற்படையின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் டிஆர்டிஓ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.