

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் நவம்பர் 14-ம் தேதியன்று இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் இந்திய ராணுவத்தினர் அவர்களை திரும்பிப் போகுமாறு பதாகை காட்டியதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்திப்பதற்கு ஒருநாள் முன்னதாக ஜம்மு காஷ்மீர் லே மாவட்டத்தில் சுஷுல் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
பொதுவாக இம்மாதிரி அத்துமீறி நுழையும் நிகழ்வுகள் வழக்கமானவையே என்றாலும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு முன்னதாக இம்மாதிரி நிகழ்வது கவலையளிக்கும் விஷயமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சீன அதிபர் இந்தியா வருகை தந்த சமயத்தில் இதே லே மாவட்டத்தில் சுமர் பிரிவில் இந்திய பாதுகாப்புப் படை வீரருக்கும் சீன ராணுவ வீரருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது 3 நாட்களுக்கு நீடித்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நவம்பர் 14-ம் தேதி சீன அத்துமீறலில் குறைந்த அளவு ஆயுதங்களுடனான சீன ராணுவ வாகனம் இந்தியப் பகுதிக்குள் ரோந்து செய்து கொண்டிருந்தது. ஆனால் உடனே திரும்பிச் செல்லுமாறு சீன ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 400 அத்துமீறல் சம்பவங்கள் நிகழ்கின்றன.