

கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லியில் 11 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் 3 தீவிரவாதிகளை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் முக்கிய குற்றவாளியான முகம்மது அமீன் என்கிற அபு யகாயா டெல்லியிலும் முஷாப் அனுவர், டாக்டர் ரஹீஸ் ரஷீத் என்கிற இருவர் கேரளாவிலும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு ஒன்று ஆன்லைனில் இளைஞர்களை மூளைச் சலவைசெய்து வருவதாக உளவுத் தகவல்கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் சதிச் செயல்களை அரங்கேற்றும் ஐஎஸ் அமைப்பின் திட்டம் தொடர்பாக முகம்மது அமீன் என்கிற அபு யகாயா தலைமையில் மூளைச் சலவை செய்யப்பட்ட நபர்கள் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
பஹ்ரைனில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்த முகம்மது அமீன், ஜம்மு காஷ்மீருக்குச் சென்றுள்ளார். கடந்த 2 மாதங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய குழுக்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
அமீன் மற்றும் அவரது சகாக்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. கேரளாவில் 8 இடங்கள், பெங்களூருவில் 2, டெல்லியில் 1் என 11 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் லேப்டாப், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.