ஸ்வபன் தாஸ் குப்தா
ஸ்வபன் தாஸ் குப்தா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிப்பு; மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் தாஸ் குப்தா

Published on

மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் ஸ்வபன் தாஸ் குப்தா நேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3, 4-ம் கட்ட தேர்தல்களில் போட்டியிடும் 63 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தலைமை கடந்த 14-ம்தேதி வெளியிட்டது. இதில் மாநிலங்களவை எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா 65), தாரகேஷ்வர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பத்திரிகையாளரான இவர் கடந்த 2016 ஏப்ரல் 25-ம் தேதி மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக பதவியேற்றார். அவரது பதவிக் காலம் வரும் 2022 ஏப்ரல் வரை உள்ளது.

இந்த பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மோயித்ரா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "மாநிலங்களவை நியமன எம்.பி.யான ஸ்வபன் தாஸ்குப்தா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு சாசன விதிகளின்படி, நியமன எம்.பி. எதாவது ஒரு கட்சியில் இணைந்தால் அவரது பதவிபறிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தாஸ்குப்தாவை பதவி நீக்கம் செய்யக் கோரி திரிணமூல் சார்பில் மாநிலங்களவை தலைவரிடம் நோட்டீஸ் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்வபன் தாஸ் குப்தா நேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்வபன் தாஸ் குப்தா கூறும்போது, "நியமன எம்.பி. என்பதால் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது பாஜக சார்பில் தாரகேஷ்வர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். எனவே எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதன் மூலம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. வரும்வியாழன் அல்லது வெள்ளிக் கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்வேன்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in