Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

லக்னோ

மேற்குவங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித் துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று விமானத்தில் மேற்குவங்கம் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, "விபத்தின் காரணமாக முதல்வர் மம்தா காயமடைந்தார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அவர் பாஜக மீது குற்றம் சாட்டி வருகிறார். மம்தா அரசியல் நாடகமாடுகிறார். இதை மக்கள் நன்கறிவார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வளர்ச்சி, அமைதியை முன்னிறுத்தி மக்கள் வாக்களிப்பார்கள். 294 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.

மேற்கு மிதினாபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியராஜ்நாத் சிங், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போன்று மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் சிக்ஸர் அடிக்கும்" என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். காஷ் மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும், முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதி களையும் நிறைவேற்றிவிட்டோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில்பொது சிவில் சட்டம் அமல்செய்யப்படும் என்று வாக்குறுதிஅளித்தோம். அந்த வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அடல் பிஹாரி வாஜ்பாய், ஜனசங்கத்தின் தலைவராக இருந்தபோது நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று யாரும் நினைக்கவில்லை. அப்போதே அனைத்து இடங்களிலும் பாஜக இருக்கும் என்று கோஷமிட்டோம். அந்தகோஷம் இன்று உண்மையாகிவிட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் பாஜக 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. பின்னர் கடந்த 1991-ம்ஆண்டில் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜக முதல்வர் கல்யாண் சிங் ஆட்சிக் காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தற்போது பாஜக ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

நாட்டின் மிகப் பெரிய கட்சியாகபாஜக உருவெடுத்துள்ளது. உலகஅளவிலும் நாங்களே மிகப்பெரிய கட்சி. பாஜக தொண்டர்களுக்கு பதவி கிடைக்காவிட்டாலும் மரியாதை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x