Published : 09 Nov 2015 10:28 AM
Last Updated : 09 Nov 2015 10:28 AM

நிதிஷ்குமார் கூட்டணி வெற்றியால் பிஹாரி - பாஹரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி: பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா கருத்து

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால் ‘பிஹாரி-பாஹரி’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமார் அடிக்கடி கூட்டணி மாறிக் கொண்டிருக்கிறார். அவரது மரபணுவில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்த நிதிஷ் குமார், நான் பிஹார் மண்ணின் மைந்தன், பிஹார் மக்களின் மரபணுதான் எனது மரபணு. ஒட்டுமொத்த பிஹாரிகளையும் பிரதமர் மோடி அவமரியாதை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 லட்சம் பிஹாரிகள் தங்களின் மரபணு மாதிரிகளை அவருக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விவகாரத்தை மையப்படுத்தியே முதல்வர் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்தார். பிஹாரை ஆள வேண்டியது பிஹாரியா அல்லது பாஹரியா (வெளிநபரா) என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று மக்களுக்கு நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து பாஜக தனது தேர்தல் வியூகத்தை மாற்றியது. அதுவரை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை முன்னிறுத்தியே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் நிதிஷ் குமார் எழுப்பிய பிஹாரியா? பாஹரியா? கேள்வியால் உள்ளூர் தலைவர்களை பாஜக முன்னிறுத்தியது.

பாஜக விளம்பர பதாகைகளில் மோடி, அமித் ஷா படங்களுக்குப் பதிலாக சுஷில் மோடி, கிரிராஜ் சிங், ராஜீவ் பிரதாப் ரூடி, நந்த் கிஷோர் யாதவ் ஆகியோரின் படங்கள் பிரதானமாக இடம்பெற்றன.

இருப்பினும் பாஜகவின் தேர்தல் உத்தி கைகொடுக்க வில்லை. பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி.யும் அந்த கட்சியின் மூத்த தலைவருமான சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

பிஹார் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியிருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இதற்காக பிஹார் மக்களுக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.

மெகா கூட்டணி வெற்றியால் பிஹாரியா- பாஹரியா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பாஜக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிஹாரை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா அண்மைகாலமாக கட்சியில் ஓரம் கட்டப்பட்டு வருகிறார். பாட்னா சாஹிப் எம்.பி.யாக உள்ள அவர் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்.

இதனிடையே நிதிஷ்குமாரின் வெற்றிக்கு பாஜக மாநிலத் தலைவர் சுஷில் மோடி, மூத்த தலைவர் கிரிராஜ் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x