

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் உயர் நீதிமன்ற வளாகம் சிஐஎஸ்எப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படுவது உறுதியாகி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பியது, நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது, பதாகைகள் வைத்தது உள்ளிட்ட தொடர் சம்பவங்களின் எதிரொலியாக உயர் நீதிமன்ற பாதுகாப்பு குறித்த வழக்கு ஒன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “சோதனை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற பாது காப்பை மத்திய தொழில்படை பாதுகாப்பு அமைப்பிடம் ஆறு மாதங்களுக்கு ஒப்படைக்கலாம். அதற்கான செலவுத் தொகையை ஏழு நாட்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். நவம்பர் 16-ம் தேதி முதல் சிஐஎஸ்எப் அமைப்பு பாதுகாப்பு பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பாது காப்பு அளித்தல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் தயார். சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டால், மொழி பிரச்னை காரணமாக வீண் சர்ச்சை ஏற்படும். எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
தேவைப்பட்டால் ராணுவம்
இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், பிரபுல்ல சி.பந்த் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. “சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரச்சினை ஏற்பட்ட தினத்தன்று, தமிழக போலீஸார் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மொழி தெரியாது என்பது உங்கள் பிரச்னை அல்ல. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீதிபதிகள் மரியாதையுடனும், பாதுகாப்புடனும் பணிபுரிவது அவசியம். அவர்கள் அச்சத்துடன் பணியாற்றுவதை அனுமதிக்க முடியாது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களாலும் முடியாவிட்டால், ராணுவத்தை வரவழைத்து பாதுகாப்பு அளிக்கலாம். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் 16-க்குள் சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு மூலம் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு அடுத்த 6 மாத காலத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது உறுதியாகியுள்ளது.