

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் குறைகள் இருந்தால், அதை நீதிபதிகள் கொண்ட குழு ஆராயும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
ஆனால், இதில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் வீரச் செயலுக்கான விருதுபெற்ற பலர் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நினைவிடங்களில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேதும்போது, “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்த அறிவிக்கையை தொடர்ந்து இத்திட்டத்தை முழுமையானதாக மாற்றுவதற்கு நீதிக்குழுவை எனது அரசு அமைக்கும். இத்திட்டத்தை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கனவாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்த அறிவிக்கையில் குறைகள் இருந்தால் அதை நீதிக்குழு ஆராயும்” என்றார்.
பிரதமர் மோடி தொடர்ந்து 2-வது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 3 ராணுவ தளங்களுக்கு பிரதமர் நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார்.
காசா என்ற இடத்தில் உள்ள டோக்ராய் போர் நினைவிடம், வல்டோகா அருகே அசால் உத்தர் நினைவிடம், பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி போர் நினைவிடம் ஆகியவற்றுக்கு சென்ற பிரதமர் அங்கு வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.