

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் உட்பட பிற எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கி இருப்பதால், இன்று நாடாளுமன்றத்தில் பெரும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சிக்காக நடந்த படுகொலை, கர்நாடக எழுத்தாளர் கல்புர்கி படுகொலை ஆகிய சம்பவங்களால் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கூறி எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் விருதுகளை திரும்ப ஒப்படைத்து கண்டனம் எழுப்பினர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த இதழியல் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழலில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வியாழக் கிழமை தொடங்கியது. அரசியல் சாசன தினத்தை கொண்டாடும் வகையில் முதல் இரு தினங்கள் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டதால், சகிப்பின்மை விவகாரத்தை எதிர்க் கட்சிகள் எழுப்பாமல் அமைதி காத்தன.
எனினும், இன்று முதல் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி, காங்கிரஸ், ஐஜத, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் என ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் தனித் தனியாக நோட்டீஸ் வழங்கி யுள்ளன. மேலும் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த ஐந்து மத்திய அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கக் கோரி ஐஜத பொதுச் செயலாளர் தியாகி சார்பில் தனியாக ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே நோட்டீஸ் வழங்கியுள்ளோம்’’ என்றார்.
மக்களவையில் சகிப்பின்மை விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்பி வேணுகோபால் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எம்பி கருணாகரன் வழங்கிய நோட்டீஸை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மக்களவையில் சகிப் பின்மை தொடர்பாக இன்று அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் சகிப் பின்மை தொடர்பான விவாதம் இன்று எடுத்துக் கொள்ளப்பட மாட் டாது என தகவல்கள் வெளியாகி யுள்ளது. ஏனெனில், அரசியல் சாசனம் தினம் தொடர்பான விவா தங்கள் தொடர்ந்து நடந்து வருவ தால், இந்த வாரத்தின் முடிவிலோ அல்லது மத்தியிலோ தான் சகிப் பின்மை பிரச்னை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.