Last Updated : 16 Mar, 2021 05:04 PM

 

Published : 16 Mar 2021 05:04 PM
Last Updated : 16 Mar 2021 05:04 PM

காங்கிரஸ் தலைவர்கள் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா வேட்புமனுத் தாக்கல்

கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

தர்மதம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் முதல்வர் பினராயி விஜயன் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இன்று காலை 11.30 மணிக்குப் பாம்பாடி மண்டல அலுவலகத்துக்கு வந்த உம்மன் சாண்டி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

77 வயதாகும் உம்மன் சாண்டி 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார். இதுவரை புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 11 முறை போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்ததை உம்மன் சாண்டி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாற்றினார்.

1970-ம் ஆண்டு தனது 27-வது வயதில் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் எம்எல்ஏவாக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை உம்மன் சாண்டியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஜேக்.சி.தாமஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் என்.ஹரி போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா ஹரிபாட் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் நகரில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு இன்று நண்பகல் 12.10 மணிக்குச் சென்ற சென்னிதலா வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ரமேஷ் சென்னிதலா

ஹரிபாட் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான தொகுதி இல்லை என்றாலும், இந்தத் தொகுதியில் 1982-ம் ஆண்டிலிருந்து ரமேஷ் சென்னிதலா போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 64 வயதாகும் ரமேஷ் சென்னிதலா, 1982, 1987, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த ரமேஷ் சென்னிதலா, கோட்டயத்திலிருந்து 1989, 1991, 1996-ம் ஆண்டுகளில் மக்களவை எம்.பி.யாகவும், 1999-ம் ஆண்டில் மாவேலிக்கரா தொகுதி எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹரிபாட் தொகுதியில் சிபிஐ சார்பில் ஆர்.சாஜிலால், பாஜக சார்பில் கே.சோமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x