

கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சமூகத்தில் நடக்கும் தவறான பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறினார்.
இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பலநலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய தவறான பிரச்சாரம் மற்றும்கோவிட்-19 நோயாளிகள், கோவிட்-19 ஒழிப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர் சந்தித்த பிரச்சினைகள் ஆகியவை மத்திய அரசு மேற்கொண்ட கோவிட்-19 தகவல் தொடர்பு முக்கிய இலக்காக இருந்தது.
கரோனா குறித்த தவறான பிரச்சாரத்தை முக்கிய அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடங்கியது. இது தொடர்பாக கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
* கரோனா குறித்த தவறான பிரச்சார மற்றும் பாகுபாடு தொடர்பான தகவல்கள், முன்பே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி தகவல்கள் மூலம் 12 லட்சம் ஆஷா ஊழியர்கள் மற்றும் துணை செவிலியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
* சுகாதார சேவை பணியாளர்கள் பற்றிய உத்வேக கதைகள் இணையதளம், தூர்தர்ஷன், வானொலி மற்றும் இதர அமைப்புகள் மூலம் பரப்பப்பட்டன.
* கரோனா குறித்த தவறான பிரச்சாரத்தை தடுக்க முக்கிய தகவல்களை கொண்டு செல்ல ஊடகம், சமூக வானொலி, இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக சுகாதார பணியாளர் அமைப்புகள் உதவின.
* கோவிட்-19 தொடர்பான தவறான பிரச்சாரத்தை போக்கும் பல ஆடியோ, வீடியோக்கள், தகவல் கையேடுகள், சமூக ஊடக தகவல்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளம், சமூக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன மற்றும் மாநில அரசு அமைப்புகள் மூலம் பரப்பப்பட்டன.
* கோவிட்-19 நோயாளிகளின் வீட்டுக்கு வெளியே போஸ்டர்கள் அல்லது இதர அறிவிப்புகள் ஒட்டக் கூடாது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆலோசனை வழங்கியது.
* கோவிட்-19 பெருந்தொற்று அவசர சட்ட திருத்தம் 2020, கடந்த 2020 ஏப்ரல் 22-ம் தேதி பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், இந்த அவசர சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2020 செப்டம்பர் 29-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் மற்றும் இச்சட்டம், சமூக பாகுபாடு செயல்களில் ஈடுபடுவோர், சுகாதார பணியாளர்களுக்கு தொந்தரவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்கிறது.
இவ்வாறு மத்திய சுகாதாரம் மறறும் குடும்ப நல இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.