Last Updated : 16 Mar, 2021 04:29 PM

 

Published : 16 Mar 2021 04:29 PM
Last Updated : 16 Mar 2021 04:29 PM

அமித் ஷா கூட்டத்துக்கு மக்கள் வராததால் விரக்தி; என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறது பாஜக: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் யாரும் வருவதில்லை. இதனால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களைத் துன்புறுத்தும் வேலையில் ஈடுபட்டு என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் போராடி வருகிறது, அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கூட்டணி தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். பிரச்சாரத்துக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி மம்தா பானர்ஜியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பிரச்சாரங்களில் மம்தா பானர்ஜி பங்கேற்று வருகிறார்.

பங்குரா நகரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் யாரும் வருவதில்லை. இதனால் அமித் ஷா விரக்தி அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜக சதி செய்து என்னுடைய பாதுகாப்பு அதிகாரி மூலம் என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையம் என்னுடைய பாதுகாப்பு அதிகாரியை நீக்கியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக நான் நடத்தும் போரில் என்னை யாராலும் தடுத்து நிறுத்து முடியாது.

நாட்டை வழிநடத்தும் பணியில் ஈடுபடாமல் அமித் ஷா கொல்கத்தாவில் அமர்ந்துகொண்டு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி தொந்தரவு செய்கிறார். நான் கேட்கிறேன், உங்களுக்கு என்ன வேண்டும், என்னைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா, என்னைக் கொல்வதன் மூலம் இந்தத் தேர்தலில் வென்றுவிடலாம் என நினைத்தால் அது தவறானது.

தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத் தன்மையை இழந்துவிட்டதா என எனக்கு வியப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையம்கூட அமித் ஷாவின் கட்டளைப்படிதான் இயங்குகிறது. தேர்தல் ஆணையத்துக்கு அமித் ஷாதான் கட்டளைகளை வழங்குகிறார். ஆணையத்தின் சுதந்திரம் என்ன ஆயிற்று. என்னுடைய பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு இயக்குநர்கூட அமித் ஷாவின் உத்தரவின்படிதான் தேர்தல் ஆணையம் நீக்கியது''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x